search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்ப வறுமை"

    • வளர்மதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக செயல்பட்டு வந்த கைகளும் கால்களும் முதுகு தண்டுவடமும் திடீரென செயலிழந்தன.
    • ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்ததால் குடும்பமே வறுமையில் சிக்கியது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புத்துறை கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன் அவரது மனைவி வளர்மதி.

    இவர்களுக்கு 7-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகாலட்சுமி என்ற மகளும், 4-ம் வகுப்பு படிக்கும் சக்திவேல் என்ற 9 வயது மகனும் உள்ளனர்.

    சிறிய அளவிலான விவசாய நிலம், 2 மாடுகளை வளர்த்துக் கொண்டு கூலி வேலைக்கு சென்று மகிழ்ச்சியாக இருந்து வந்த இந்த குடும்பத்தினருக்கு வளர்மதியின் உடல் நலக்குறைவால் நிலைமை தலைகீழாக மாறியது.

    வளர்மதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நன்றாக செயல்பட்டு வந்த கைகளும் கால்களும் முதுகு தண்டுவடமும் திடீரென செயலிழந்தன.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகரன் உள்ளூர் மற்றும் தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு தனியார் ஆஸ்பத்திரியில் தனது மனைவி வளர்மதியை அழைத்துச் சென்று பெரும் செலவு செய்து சிகிச்சை பார்த்தார்.

    பரிசோதனை செய்து பார்த்தபோது அபூர்வ வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் தொடர்ந்து மாத்திரை சாப்பிட்டு வந்தால் குணமாகும் என்று கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் கடந்த 1½ ஆண்டு காலமாக இந்த நோய் குணமாகவில்லை.

    இதையடுத்து பெங்களூருக்கு சென்று அங்கும் சிகிச்சை பார்த்தும் குணமாகவில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர். தொடர் சிகிச்சை காரணமாக குடும்ப வருமானம் பாதித்தது. மேலும் மருத்துவச் செலவிற்கு வீட்டை அடமானம் வைத்தும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் பெற்றனர். ரூ.10 லட்சத்துக்கும் மேல் செலவு செய்ததால் குடும்பமே வறுமையில் சிக்கியது.

    தொடர்ந்து சிகிச்சை பெற வழி இல்லாததால் அவர்கள் செய்வது அறியாது வேதனையில் தவித்து வருகின்றனர். குடும்ப சூழ்நிலை அறிந்து அவரது மகள் மகாலட்சுமி தானே வீட்டு வேலைகளையும் சமையல் வேலைகளையும் செய்து தாயை பராமரித்து விட்டு அவ்வப்போது பள்ளிக்கு சென்று வருகிறார்.

    அதேபோல சக்திவேலும் மாட்டையும் ஒரு கன்று குட்டியையும் தானே தீவனம் போட்டு பராமரித்து வளர்த்து பணிகளை முடித்து பள்ளிக்கு சென்று வருகிறார்.

    மேற்கொண்டு சிகிச்சை பெற வழி இல்லாமல் வேதனையில் தவிக்கும் குடும்பத்தினர் தங்களுக்கு உதவ தமிழக முதலமைச்சரும் தமிழக அரசும் முன் வரவேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முறையாக பணிபுரிவதற்கான விசா பெற்று வேலைக்குச் சென்றால் பிரச்சினை இல்லை.
    • சித்ரா-சுரேஷ் தம்பதியினர் வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி ருக்குமணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    மதுரை:

    குடும்ப வறுமை காரணமாகவும், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற நோக்கத்திற்காகவும் பட்டதாரிகள் முதல் படித்தவர்கள் வரை பலரும் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதை கனவாக கொண்டுள்ளனர்.

    அவர்களின் பசிக்கு இரைபோடும் வகையில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் தனியார் ஏஜென்சி நிறுவனங்கள் பல்வேறு ஆசைகளை அவர்களுக்கு விதைத்து லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அனுப்பி வைக்கிறார்கள்.

    அவ்வாறு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் படும் அவஸ்தை சொல்லி மாளாது. பலர் வேறு வழியின்றி உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களும் ஏராளமாக அரங்கேறியுள்ளன. உற்றார், உறவினர்களிடம் கடன் வாங்கி, இருக்கும் நகைகளை அடமானம் வைத்து கிடைத்த பணத்துடன் ஆசைகளுடன் வெளிநாடுகளுக்கு பறக்கும் பலருக்கும் அது நிராசையாகவே இருந்துள்ளது.

    இதில் குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏஜெண்டுகள் இதற்காக பணிபுரிந்து வருகிறார்கள். வெளிநாட்டிற்கு வீட்டு வேலைக்கு பணி பெண்கள் தேவை மாதம் கை நிறைய சம்பளம் என்கின்ற விளம்பரங்களை வெளியிடுகிறார்கள். முறையாக பணிபுரிவதற்கான விசா பெற்று வேலைக்குச் சென்றால் பிரச்சினை இல்லை.

    ஆனால், இது பெரிய வேலை. என்பதனால் பலரையும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசாவில் சுற்றுலா பயணிகளாக பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    அவ்வாறு செல்லும்போது, எதாவது பிரச்சினை ஏற்பட்டால், அரசு உதவி செய்வது ரொம்பவே கடினம். இதற்குத் தமிழ்நாட்டிலேயே பல உதாரணங்கள் உள்ளன. இவ்வாறு வீட்டு வேலை என்று நம்பி வெளிநாட்டிற்குச் சென்ற தென் மாவட்டங்களைச் சார்ந்த இளம்பெண்கள் அங்கு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள். அதாவது வேலை என அழைத்துச் சென்று ஒரு கும்பல் பெண்களை பாலியல் தொழில் உட்பட பல்வேறு தொழில்களுக்கு ஏலம் மூலம் முகம் தெரியாத நபர்களுக்கு விற்பனை செய்து விடுவதாகப் புகார் பெறப்பட்டுள்ளது.

    அந்த வகையில், ஓமன் நாட்டிற்கு வேலைக்கு அழைத்துச் சென்று பெண்களை ஏலத்துக்கு விடுவதாகவும், அதில் மாட்டிக்கொண்ட தன் தாயை மீட்டு தர வேண்டுமென மகள் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தது பெரும் அதிர்வலை ஏற்படுத்தியிருக்கிறது.

    மதுரை அய்யர்பங்களா பகுதியைச் சேர்ந்தவர் ருக்மணி. இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியைச் சேர்ந்த சித்ரா-சுரேஷ் தம்பதியினர் வெளிநாட்டில் வேலை இருப்பதாக கூறி ருக்குமணியை கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஓமன் நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    தொடர்ந்து ஓமன் நாட்டிலுள்ள ஏஜெண்டு ருக்மணியை ரூ.2, 3 லட்சத்திற்கு ஏலத்திற்கு விடுவதற்காக அழைத்து சென்றுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ருக்மணி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வந்த 15-க்கும் மேற்பட்ட பெண்களை தனி அறையில், அதுவும் ஆண்கள் தங்கிருந்த அறையில் அடைத்து வைத்து கொடுமை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சித்ரா-சுரேஷ் தம்பதியினரை தொடர்பு கொள்ள முடியாததால் இதுகுறித்து ருக்மணியின் இரண்டாவது மகள் செல்வலட்சுமி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சங்கீதாவிடம் நேரடியாக மனுவை கொடுத்தார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், நானும் என் அக்காவும் கல்லூரியில் படித்து வருகிறோம். கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து வருவதால் தன் தாயை வெளிநாட்டில் இருந்து அழைத்து வர தமிழ்நாடு அரசு உதவ வேண்டும் என்றார்.

    இதையடுத்து ஓமன் நாட்டில் தவித்து வந்த அந்த பெண் பல்வேறு சமூக அமைப்புகள் உதவியுடன் பத்திரமாக மீட்டு அழைத்து வரப்பட்டார். இதேபோல் ஓமன் நாட்டில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த பல பெண்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

    ×